CIA எனப்படும் அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள வளாகங்கள் மீது ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதல்களில், இலக்கு நிர்ணயம் செய்வதற்கான தரவுகள் அல்லது மேம்பட்ட தொழில்நுட்பங்களை ரஷ்யா வழங்கியதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விபரம் அறிந்த நான்கு நபர்களை மேற்கோள்கொண்டு ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அமைந்துள்ள CIA நிலையம் மற்றும் ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள மற்றொரு தனித்த தளம் உள்ளிட்ட குறைந்தது இரண்டு CIA தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களின் துல்லியமான தன்மை, செயல்திறன் மற்றும் ஈரானுக்கு ரஷ்யா வழங்கி வரும் பரந்த தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில், ரஷ்யா இதில் உதவி இருக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கிறது.
சவூதி தாக்குதலில் ரஷ்யாவின் மேம்படுத்தப்பட்ட 'ஷாகெட்' (Shahed) ரக ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் ஆளில்லா வானூர்தி தூதரகத்தின் வெளிச்சுவரில் துளையிட, இரண்டாவது ஆளில்லா வானூர்தி அந்தத் துவாரத்தின் வழியே சென்று வெடித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எவ்வாறாயினும், பிராந்திய CIA தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதில் ரஷ்யா பங்கு வகித்திருக்கக்கூடும் என்று
மேற்கத்திய உளவுத்துறை அமைப்பு ஒன்றின் உள் குறிப்பு முடிவு செய்துள்ளது.
ஈரானிய ஆளில்லா வானூர்திகளின் இலக்குத் துல்லியத்தை அதிகரிக்க ரஷ்யா உதவியதாகவும், சமிக்ஞை தடை (Signal Jamming) செய்வதற்குக் கடினமான 'கொமேட்டா-எம்' (Kometa-M) எனப்படும் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை (Satellite Navigation System) ஈரான் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, ஈரானுடன் நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவரப் போராடி வரும் நிலையில், CIA போன்ற மிக முக்கியமான உளவுத் தளங்களை குறிவைக்க ரஷ்யா உதவிபுரிவது அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பாரிய தடையாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனினும், ஈரான் தூதரகத்தை பொதுவாகக் குறிவைத்துத் தாக்கியிருக்கலாம் என்றும், அது தற்செயலாக CIA நிலையத்தைத் தாக்கியிருக்கக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரங்கள் குறித்து வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், CIA மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தரப்பில் இருந்து உடனடிப் பதில்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.