நாடாளுமன்றத்தை விளையாட்டுத்தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்ற அமர்வின் போது நிலையியல் கட்டளைகள் குறித்து கேள்வி எழுப்ப முற்பட்ட போது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்தார்.
நிலையியல் கட்டளைகளின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தகாத வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டிய அவர், சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ளவர் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும், உறுப்பினர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இவ்வாறான முறையில் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகளை எவரும் மேற்கொண்டதில்லை என தெரிவித்தார்.