இலங்கையின் இனக்கலவரங்களும் ஆறாத வடுக்களும்...

இரண்டு இனக் கலவரங்கள்... ஒரு குடும்ப தலைவியின் வாக்குமூலம்.

1958 , 1983 கலவரங்களின் நேரடி சாட்சிகளில் ஒருவர் திலகா மயில்வாகனம். கொழும்பு ரோயல் கல்லூரியில் 20 வருடங்கள் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்..

இவரும், குடும்பத்தினரும் 1984 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தனர்.

அந்த கலவரங்களின் பயங்கரமான அனுபவங்களை ஊடகம் ஒன்றுக்கு சில வருடங்களுக்கு முன் திலகா பகிர்ந்து கொண்டார்.

- 1958 ஆம் ஆண்டு நாங்கள் எங்கள் நான்கு பிள்ளைகளுடன் கல்கிசையில் வசித்து வந்தோம். அந்த .....காலையில், நாட்டில் பதற்றமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருப்பதற்கான சில அறிகுறிகள் தென்பட்டன.

ஆனால், என் கணவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 'மக்கள் பேசுகிறார்கள் என்பதற்காக நான் ஓடிப் போகப் போவதில்லை,' என்று உறுதியாகக் கூறினார்.

அன்று, கொழும்பு பொது வைத்தியசாலையில் ஒரு நோயாளியைப் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எங்களுக்காகக் காத்திருந்த சிங்களக் கும்பல் ஒன்று எங்களை வழிமறித்தது. சாலையின் குறுக்கே ஒரு பெரிய மரக் கட்டையை வைத்து எங்கள் வாகனத்தை நிறுத்தி, முதலில் எங்களைக் கொன்று விட்டு, பின்னர் எங்கள் வீட்டைத் தாக்குவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

ஆனால், என் கணவர் துரிதமாக வாகனத்தை எங்கள் வீட்டின் நுழைவாயிலுக்குள் செலுத்தினார். எதிர்பாராத இந்த நடவடிக்கையால் அந்தக் கும்பல் திகைத்துப் போனது.

வீட்டுக்குள் சென்ற எங்களை வெளியே வர வேண்டாம் என்று கூறிய அவர், அவருடைய சட்டைப் பையில் துப்பாக்கி இருப்பது போல் பாவனை செய்து, 'யாராவது வீட்டுக்குள் வந்தால் சுட்டு விடுவேன்,' என்று எச்சரித்தபடி வீட்டின் முன்புறத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.

இருள் சூழத் தொடங்கியதும், அந்தக் கும்பல் எங்கள் வீட்டின் மீது கற்களை வீசத் தொடங்கியது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. நான் என் இரண்டு மாதக் குழந்தையையும் சேர்த்து நான்கு பிள்ளைகளையும் வீட்டின் பின்புற அறையில் என் மாமியாருடன் பாதுகாப்பாக இருக்கச் செய்தேன். அன்றைய தினம் என் தந்தையும் எங்களுடன் இருந்தார்.

நடப்பதை அறிந்திருந்த என் இரு சகோதரர்கள் இரண்டு கார்களில் எங்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்களில் ஒருவர் தோட்டாக்கள் இல்லாத ஒரு துப்பாக்கியைக் கொண்டு வந்திருந்தார்.

'யாரையும் கொல்ல நான் வரவில்லை. அந்தக் கும்பலை பயமுறுத்துவதற்காகத்தான் இதைக் கொண்டு வந்துள்ளேன்,' என்று அவர் கூறினார்.

நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். என் கணவர் முதலில் மறுத்தாலும், இறுதியில் அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கினார்.

வீட்டை விட்டு வெளியேறும்போது, என் இரண்டு மாதக் குழந்தைக்குத் தேவையான சில துணிகளையும் ஒரு பால் போத்தலையும் மட்டுமே எடுத்துச் செல்ல முடிந்தது. மற்ற அனைத்தையும் அங்கேயே விட்டு விட்டு வெளியேறினோம்.

முதலில் என் சகோதரரின் வீட்டில் தங்கினோம். ஒரு நாள் கழித்து, அதே பகுதியில் வசித்து வந்த என் பெற்றோரும் எங்களுடன் சேர்ந்தனர். பின்னர், நான் என் பிள்ளைகளுடன் அவர்களோடு யாழ்ப்பாணத்துக்குச் சென்றேன்.

ஒரே இரவில் என் வாழ்நாள் முழுவதும் சேர்த்த அனைத்தையும் இழந்து விட்டேன். வேலை காரணமாக என் கணவர் மட்டும் கொழும்பிலேயே தங்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில், என் உறவினரின் வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு இருந்த நாட்களில், எங்களை மீண்டும் தாக்க வருகிறார்கள் என்ற பயங்கரக் கனவுகளால் நான் அடிக்கடி அலறியபடி விழித்துக் கொள்வேன்.

ஒவ்வொரு முறையும் என் தந்தை எனக்கு ஆறுதல் கூறுவார். நானும் என் பிள்ளைகளும் என் கணவரை நினைத்து ஏங்கினோம். மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கொழும்புக்குத் திரும்பினோம்................................

1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கொழும்பில் வெடித்தபோது, எங்களுடைய மிகவும் நெருங்கிய சிங்கள நண்பரான பிரிகேடியர் ஜெனரல் காமினிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர், 'உங்கள் தெருவுக்குள் யாரும் வராதபடி என்னால் முடிந்ததைச் செய்வேன். அதற்கு மேல் என்னால் எதையும் உறுதியளிக்க முடியாது,' என்று கூறினார். அப்போது அவரும் சூழ்நிலையின் முன் உதவியற்றவராக இருந்தார்.

அதிர்ஷ்டவசமாக, எங்கள் வீட்டுக்கு எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை. இருந்தாலும், இனி இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாது என்பதை அப்போதே நாங்கள் உணர்ந்தோம்.

அந்தக் காலத்தில் என் கணவர் ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவரை அழைத்து, 'தமிழர்–சிங்களவர் பிரச்சினை விரைவில் முடிவடையப் போவதில்லை. உங்கள் குடும்பம் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்,' என்று தெரிவித்தார்.

ஆனால், 1983 கலவரத்தின் கொடூரம் எங்கள் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. என் மைத்துனரின் ஒரே மகன் சிங்களக் கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். அந்தப் பேரதிர்ச்சி என் கணவருக்கு மாரடைப்பை ஏற்படுத்தியது.

அவர் உடல் நலம் தேறி பயணம் செய்யக் கூடிய நிலைக்கு வந்த பின்னர், 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தோம்.

1958 மற்றும் 1983 இன வன்முறைகள் எங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்தன. வீடு, உடைமைகள், உறவுகள் என பலவற்றை இழந்தோம்.

ஆனால், அந்தக் கொடூர அனுபவங்களின் நினைவுகள் இன்று வரை எங்கள் மனங்களில் ஆறாத வடுக்களாகவே இருக்கின்றன.

Bootstrap