நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்க்கட்சியினரால் கடந்த 21ஆம் திகதி சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின்போது, கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நீதியமைச்சர் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளின்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இன் கீழான நடவடிக்கைகளும், காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்வி நேரமும் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27\2 இன் கீழ் வினாக்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதன்பின், காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.