சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பு இன்று (24) நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது.
பிரிட்டிஷ் சட்டத்தரணியான கரீம் கான், தனது பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தன் மீதான பாலியல் முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கரீம் கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அத்துடன், அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக, நியூயோர்க்கில் நடைபெறும் இந்த ஐ.நா கூட்டத்தில் கரீம் கான் நேரடியாகப் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகின்றது.
உலகெங்கிலும் உள்ள தூதுவர்கள் பங்கேற்கும் இந்த வாக்கெடுப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.
நெருக்கடியில் சிக்கியுள்ள தலைமை சட்டத்தரணி கரீம் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அவரைப் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதா இல்லையா என்பது குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.