அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கிடையே கடந்த 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1985ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஆட்சிக் காலத்தில், லெபனானைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் 'பிளைட் 847 என்ற அமெரிக்க விமானம் கடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்க அரசு, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி லெபனானுக்கான நேரடி விமான சேவையை உடனடியாக இரத்து செய்து தடை விதித்துள்ளது.
தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தடை உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், லெபனான் பல தசாப்தங்களாக பல்வேறு இன்னல்களைச் சந்தித்து, மிகவும் மோசமாக நடத்தப்பட்ட ஒரு நாடாகும். இனிவரும் காலங்களில் அந்த நாட்டிற்கு உரிய மரியாதையும், முழுமையான ஆதரவும் கிடைப்பதற்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும்,' என்று தெரிவித்துள்ளார்.