சர்வதேச பதற்றங்கள் மற்றும் ஈரானுடன் தொடர்ந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபை தனது நாட்டின் இராணுவ பலத்தை அதிகரிக்க 1.15 ட்ரில்லியன் டாலர் (இந்திய,இலங்கை மதிப்பில் சுமார் 111 இலட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்பு கொள்கை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 216-212 என்ற வாக்குகள் கணக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இராணுவ வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவிற்கு தினசரி சராசரியாக 8,000 கோடி வரை செலவாவதாகவும், இதுவரை மொத்தம் 3 இலட்சம் கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவப் பலத்தை மீட்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தில் சில முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலின் உலகப்புகழ் பெற்ற 'அயர்ன் டோம்' பாணியில், அமெரிக்காவைப் பாதுகாக்க 'கோல்டன் டோம்' என்ற புதிய வான்வழி ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன், அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு 5 விகிதம் முதல் 7 விகிதம் வரை ஊதிய உயர்வு வழங்கவும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றுள்ள இந்த சட்டமூலம், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.