முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், யோஷித ராஜபக்ஷ உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணையை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனை பரிசீலித்த நீதிபதி, வழக்கை ஓகஸ்ட் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சாட்சியமளிக்க வேண்டிய கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தினார்.
தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் ரூ.100 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய ஐந்து காணிகளை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.