ஒரே வீட்டில் 20 ஆண்டுகளாக மௌனமாய் இருந்த தம்பதியர்

ஒரே வீட்டில் 20 ஆண்டுகள் மௌனமாக வாழ்ந்த தம்பதியரின் விசித்திரமான உண்மைச் சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.

ஜப்பானின் நாரா  பகுதியைச் சேர்ந்த ஒடோ கடாயாமா மற்றும் அவரது மனைவி யுமி கடாயாமா ஆகியோரே இந்த தம்பதியர் ஆவர். இவர்கள் இருவரும் தங்களது மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தபோதிலும், கணவர் ஒடோ கடந்த 20 ஆண்டுகளாகத் தன் மனைவியுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்து வந்தார்.

மனைவி யுமி தொடர்ந்து அவரிடம் பேச முயன்றபோதிலும், ஒடோ வெறும் தலையசைப்பு மற்றும் சைகைகள் மூலமாக மட்டுமே பதிலளித்து வந்துள்ளார்.

இந்த விசித்திரமான மௌனத்திற்குப் பின்னால் இருந்த காரணம், எந்தவொரு பெரிய குடும்பச் சண்டையோ அல்லது துரோகமோ அல்ல.

தங்களுக்குக் குழந்தைகள் பிறந்த பிறகு, மனைவி யுமி தனது முழு அன்பையும் கவனத்தையும் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே செலுத்தினார். இதனால் தான் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த ஒடோ கடாயாமா, மனைவி மீது கடுமையான பொறாமை மற்றும் மனக்கசப்பு கொண்டார்.

தனது ஆதங்கத்தை மனைவியிடம் நேரடியாகக் கூறாமல், அவர் பேசாமல் மௌன விரதத்தைத் தொடங்கினார். காலப்போக்கில் அந்தப் பிடிவாதம் மற்றும் அஹந்தை (Ego) ஒரு பழக்கமாகவே மாறி, 20 ஆண்டுகால மௌனமாக நீடித்தது.

இந்த மௌனத்திற்கு இடையிலும், அவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தனர், ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர், மேலும் தங்களது குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கினர். ஒடோ தனது பிள்ளைகளுடன் சாதாரணமாகப் பேசினார், ஆனால் மனைவியிடம் மட்டுமே பேசவில்லை.

இவர்களின் பெற்றோர் ஒருவருடன் ஒருவர் பேசுவதை அதுவரை பார்த்திராத இவர்களது 18 வயது இளைய மகன் யோஷிகி , இந்த நிலையை மாற்ற ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி  ஒன்றின் உதவியை நாடினார்.

அந்தத் தொலைக்காட்சி குழுவினர், இந்தத் தம்பதியர் பல ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் சந்தித்து காதல் வயப்பட்ட பூங்காவிற்கு இருவரையும் வரவழைத்து ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அந்தப் பூங்காவின் இருக்கையில் அமர்ந்தபோது, ஒடோ கடாயாமா தனது 20 ஆண்டுகால மௌனத்தை உடைத்து, மனைவியைப் பார்த்து, 'நாம் பேசி நீண்ட காலமாகிவிட்டது' என்று மெதுவாக உரையாடலைத் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், 'நீ பிள்ளைகளுக்காகவே உன்னை அர்ப்பணித்துக் கொண்டாய். இத்தனை ஆண்டுகள் பல கஷ்டங்களை எனக்காகப் பொறுத்துக் கொண்டாய், உனக்கு என் நன்றிகள். இனி நாம் மீண்டும் பேசி மகிழ்ச்சியாக வாழ்வோம்' என்று தனது பொறாமை உணர்வை ஒப்புக்கொண்டு நெகிழ்ச்சியுடன் மன்னிப்புக் கேட்டார்.

மறைந்திருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் பிள்ளைகள், தங்களது பெற்றோர் முதன்முறையாகப் பேசுவதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இந்தச் சம்பவம் நடந்து சில ஆண்டுகள் ஆன போதிலும், மனித உறவுகளின் சிக்கல்களையும், பிடிவாதத்தையும் விளக்கும் இவர்களின் மீள்சந்திப்புக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி உலகளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Bootstrap