போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்; கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு...

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், கடந்த மே மாதம் 15-ந் தேதி நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, சில வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என்று கூறியிருந்தார்.

ஆனால்இ இந்த கருத்தை நையாண்டி செய்யும் விதமாக பலர் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதன் வெளிப்பாடாக உருவானதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.

இந்த கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே, மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அவர், தலைமை நீதிபதியின் கருத்தை சுட்டிக்காட்டி 'அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?' என்று பதிவிட்டு இருந்தார். இந்த கருத்து 'ஜென் ஸி' மற்றும் 25 வயதிற்கு உள்பட்ட இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்றன.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஜேபி எனப்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கத்தினர், டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் 36வது நாளை எட்டிய நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் இன்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் சிஜேபி இயக்கத்தினர் இன்று 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோருடன் சிஜேபி இயக்கத்தைச் சேர்ந்த சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் சிஜேபி இயக்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசியதாவது; போராட்டம் தொடர்பான வழக்குகள் குறித்து 4 முக்கிய அம்சங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வ கோரிக்கையை கொண்டு வந்தனர். அதோடு, போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.

மேலும், கல்வி முறையில் சீர்திருத்தம் தொடர்பாக அவர்கள் வழங்கிய 5 பரிந்துரைகள் குறித்தும் விவாதித்தோம். போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. எப்ஐஆர் நகலை அவர்களுக்கு வழங்குவோம். அதேபோல தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, சவுரவ் தாஸ் கூறியதாவது; நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இதனால், சிஜேபி நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுகிறோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். இன்னும் 4 வாரங்களுக்குள் மத்திய அரசுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Bootstrap