ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக விளக்கமளித்து, ஊடகங்களில் வெளியான செய்திகளை முற்றாக நிராகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில், ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், அவற்றில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகத் தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின.
இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ செயல்பாட்டுத் தேவைகளுக்காகப் பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணியாளர்கள் மற்றும் இதர அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மட்டுமே அந்தந்தக் காலப்பகுதிகளில் மாளிகை வளாகத்திலுள்ள தனித்தனி கட்டிடங்களில் தற்காலிகமாகத் தங்கியிருந்தனர் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய கொள்கையின்படி, ஜனாதிபதி மாளிகைகளை ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ தங்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்துவதில்லை என்பதும், அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கும் வணிக நோக்கங்களுக்கும் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.