ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான உபாலி தர்மதாச காலமானார்.
அவர் 1996 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிகரமாக பணியாற்றினார்.
அதற்கு முன்னர், 1993 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் பல முறை துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் மூவர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவிலும் அவர் அண்மையில் அங்கத்துவம்பெற்றிருந்தார்.
இலங்கையின் முன்னணி நிறுவனமான நவலோகா குழுமத்தின் இணைப் பொது முகாமையாளராக நீண்ட காலம் செயற்பட்டார்.
கொழும்பில் மிகவும் பிரபலமான பாரம்பரிய இலங்கை உணவகமான 'உபாலிஸ்' (Upali's by Nawaloka) உணவகத்தின் நிறுவனரும் இவராவார். ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவராகவும், செலான் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும்.