அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 'குடு அசங்க' என்றழைக்கப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று (26) அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியின் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 'குடு அசங்க' இரகசியமாக போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2,050 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு தொகை ரொக்கப் பணம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் மூவரை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.