நுவரெலியாவில் சமாதான நீதவான்கள் மீது மோசடி குற்றச்சாட்டு

நுவரெலியா பிரதான நகரில் சில சமாதான நீதவான்கள், சத்தியப் பிரமாணக் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வரும் பொதுமக்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சமூகத்திற்கு இலவச சேவையாற்றும் நோக்கில் வழங்கப்படும் சமாதான நீதவான் பதவி அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற நபர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரமாணப்பத்திரங்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இலவசமாக அத்தாட்சிப்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே நீதி அமைச்சினால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், கிராமிய மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சமூக நலப்பணிகளில் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட வேண்டும் என்பதும் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், நுவரெலியாவில் சில சமாதான நீதவான்கள் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்தல், ஆவணங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் கையொப்பமிடுதல் போன்ற சேவைகளுக்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களை வசூலிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தோட்டப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் இருந்து வரும் மக்களின் அவசரத் தேவைகளை பயன்படுத்தி இந்த முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சமாதான நீதவான்கள் இலவசமாக சேவை வழங்க வேண்டும் என நீதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதுடன், பதவியேற்பின்போது அதற்கான உறுதிமொழியையும் வழங்குகின்றனர். இருப்பினும், அந்த விதிமுறைகள் மீறப்படுவதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட சமாதான நீதவான்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Bootstrap