கனடா ஏரியில் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 12 வயது சிறுவனுக்கு வீரப்பதக்கம்.

கனடாவில் ஏரி ஒன்றில் படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு பேரின் உயிரைக் காப்பாற்றிய 12 வயது சிறுவனுக்கு நாட்டின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள Wabamun ஏரிக்கு, பெஞ்சமின் கெர்பர் (Benjamin Gerber) மற்றும் அவரது தங்கை அமெலியா (Amelia) ஆகியோர் தங்கள் பெற்றோருடன் பொழுதுபோக்கச் சென்றிருந்தனர்.

அப்போது, ரப்பர் படகில் கரையை நோக்கி வந்துகொண்டிருந்த அவர்கள், அருகில் ஒரு படகு கவிழ்ந்திருப்பதையும், இரண்டு ஆண்கள் தண்ணீரில் உயிர் தப்பிக்கப் போராடிக்கொண்டிருப்பதையும் கவனித்தனர்.

உடனடியாக கரையில் நின்றிருந்த தனது தாயை நோக்கிப் பார்த்த பெஞ்சமினிடம், "என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய், போ!" என்று அவரது தாய் கூறியதும், பெஞ்சமினும் அமெலியாவும் தயக்கமின்றி தண்ணீருக்குள் குதித்தனர்.

பெஞ்சமினும் அமெலியாவும் சிறந்த நீச்சல் வீரர்கள் மட்டுமல்லாமல், Junior Lifeguard Club அமைப்பின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இதனால், மீட்புப் பணியில் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்ட அவர்கள், ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர்.

அதில், சுயநினைவிழந்த நிலையில் இருந்த ஒருவரை சுமார் 80 அடி தூரம் இழுத்துக்கொண்டு நீந்திய பெஞ்சமின், அவரைப் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தார்.

அப்போது பெஞ்சமினுக்கு வெறும் 12 வயதுதான். அவர் காப்பாற்றிய நபர் உடல் எடையிலும் உயரத்திலும் அவரைவிட மிகவும் பெரியவராக இருந்தபோதிலும், தனது நீச்சல் பயிற்சியை நம்பி உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினார்.

இந்த வீரச் செயலுக்காக, பெஞ்சமினுக்கு தற்போது வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன், M.G. Griffiths Certificate என்ற சிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

Lifesaving Society Canada வழங்கும் இந்த M.G. Griffiths Certificate, நாட்டிலேயே இரண்டாவது உயரிய வீர விருதாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், பெஞ்சமினின் தங்கையான அமெலியாவும் மீட்புப் பணியில் முக்கிய பங்காற்றியிருந்தாலும், அதே சான்றிதழைப் பெறுவதற்கு அவர் 15 வயதை நிறைவு செய்யும் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap