ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அதன் போக்குவரத்து நிர்வாகம் தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ராணுவ மோதல்களுக்கு மத்தியில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சர்வதேச கடல்வழிப் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்ய இரு நாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன
இந்தப் பேச்சுவார்த்தை முற்றிலும் ஈரான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயம் என்றும், இதில் அமெரிக்காவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடியே உள்ளதால், கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான பொதுவான கொள்கைகள் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதேவளை, அமெரிக்காவின் செயல்பாடுகள் சட்டங்களைப் பின்பற்றாத ஒரு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் கும்பல் போல இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
இந்நிலையில், தற்போது இந்நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், கடலோர நாடான ஓமனை இதில் ஈடுபடுத்தி சேவைக் கட்டணம் வசூலிப்பது போன்ற நிர்வாகக் கட்டுப்பாடுகளைத் தக்கவைக்க ஈரான் முயல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.