கிழக்கு நேபாளத்தில் வன்முறை-ஒருவர் உயிரிழப்பு

கிழக்கு நேபாளத்தில் நேற்றிரவு (26) இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 24 வயது மதிக்கத்தக்க ஓம் பிரகாஷ் மேத்தா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு இன்று (27) காலை 7 மணி முதல் அப்பகுதியில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், மறுஉத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு தொடருமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (26) கிழக்கு நேபாளத்தின் சுன்சரி மாவட்டத்தில் உள்ள திவான்கஞ்ச், கப்தன்கஞ்ச் பஜார் பகுதி வழியாக சிலர் சப்தகோஷி நதியை நோக்கிப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளபோது, ஒரு தரப்பினர் உரத்த சத்தத்துடன் இசைக்கச்சேரி நடத்தியபடி சென்றுள்ளனர்.

இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறை மோதலாக வெடித்துள்ளது.

இந்த மோதலின் போது வன்முறையாளர்கள் வீடுகள், வைத்தியசாலைகள் வாகனங்கள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துக்களைச் சூறையாடியதுடன், தீவைத்தும் கொளுத்தியுள்ளனர். இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , கலவரக்காரர்களைக் கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Bootstrap