பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் அவருக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பிடியாணை கடந்த ஜூலை 24ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். அத்துடன், வழக்கு விசாரணையின் போது அவரது பிணைதாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்வதற்கான பிடியாணையை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் தரப்பில் சட்டத்தரணி ஒருவரூடாக மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த வழக்கு தொடர்பாக அவர் நேற்று(27.07.2026) நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.