7 ஆண்டுகளாக நுரையீரலில் இருந்த பேனா மூடி; 10 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, சிறுமிக்கு மருத்துவ நிபுணர்கள் அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் பிரான்கோஸ்கோபி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த பரிசோதனையின் முடிவுகளைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதாவது, இந்த பரிசோதனையில் சிறுமியின் நுரையீரலில் பேனா மூடி இருப்பது கண்டறியப்பட்டது. கிட்டத்தட்டக் கடந்த 7 வருடங்களாக அந்த சிறுமிக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்துவந்துள்ளன.

அதனால், அவரது பெற்றோர்கள் பல மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

அங்கு, அந்த சிறுமிக்கு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், அந்த சோதனையில் எந்த பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. இதையடுத்து, மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு இருமல் மற்றும் ஆஸ்துமா இருப்பதாக யூகித்து மருந்து கொடுத்து வந்தனர்.

ஆனாலும், நாளுக்கு நாள் உடல்நிலை பாதிப்படைந்தது வந்ததால், சிறுமியின் பெற்றோர் மும்பையில் உள்ள எஸ்.ஆர்.சி.சி குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள குழந்தை நல மருத்துவ நிபுணர்கள், சிறுமிக்கு அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் பிரான்கோஸ்கோபி பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் நுரையீரலில் பிளாஸ்டிக் பேனா மூடி இருந்தது கண்டறியப்பட்டது.

அந்த சிறுமி 3 வயதில் இருக்கும் போதே அந்த பேனா மூடியைத் தவறுதலாக விழுங்கியுள்ளார். அந்த மூடி பிளாஸ்டிக் பொருள் என்பதால் எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த சோதனைகளிலும் இது கண்டறியப்படவில்லை.

பல ஆண்டுகளாக அந்த பேனா மூடி நுரையீரலில் இருந்ததால், அப்பகுதி சீழ் பிடித்து, சுருங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலமாகப் பேனா மூடி மற்றும் பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதி வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

Bootstrap