புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்குவதில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் இயக்கத்தில் கடந்த 17ஆம் தேதி 'தி ஒடிஸி' படம் வெளியாகியிருந்தது. இப்படம் கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காப்பியங்களில் ஒன்றான 'தி ஒடிஸி' என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த கதை ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பு போருக்குப் பிந்தைய ஒரு வீரனின் நாடு திரும்புதலை மையமாகக் கொண்டது.
இப்படம் முதல் முறையாக ஒட்டுமொத்த படம் முழுக்க ஐமேக்ஸ் 70எம்எம்(70MM) கேமராவில் படமாக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக இதுவரை 2,500 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிறிஸ்டோபர் நோலன் தற்காலிகமாக ஓய்வு எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், 'இப்படத்தின் பிரம்மாண்டமான கால அளவு, என்னையும் என் படக்குழுவினரையும் உடல்ரீதியாக பெரும் பாதித்தது. அதாவது ஆற்றலின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது. இது 'தி ஒடிஸி' கதை, அதனால் கடினமாகத்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால் நாங்கள் சரியாக எடுக்கவில்லை என்று அர்த்தம்' என்றார்.
அப்போது அவரிடம் 'தி ஒடிஸி' படத்திற்காக ரசிகர்கள் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படியென்றால், உங்களது அடுத்த படம் வெளியாக 'மீண்டும் மூன்று ஆண்டுகள்' ஆகுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆமாம், குறைந்தது அவ்வளவு காலமாவது ஆகும்' என்று பதிலளித்தார்.
2014-ஆம் ஆண்டு முதல், 'இன்டர்ஸ்டெல்லார்'இ 'டன்கிர்க்'இ 'டெனெட்' மற்றும் 'ஓப்பன்ஹைமர்' போன்ற படங்களுக்கு இடையே மூன்று வருட இடைவெளியை நோலன் தொடர்ந்து எடுத்து வருகிறார். ஆனால் அவை அனைத்தும் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள்ண்டதாகவும் இப்போது மூன்று வருடங்கள் கழித்து தான் பணிகளை தொடங்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.