கனடாவின் டொரண்டோ நகரில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த பல வழக்குகளில், உயிரிழந்த பெண்களின் அடையாளங்களை நவீன மரபியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறியும் நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அவற்றில், 90 ஆண்டுகளுக்கு முன்பு கணவரால் தாக்கப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் பெண் ஒருவரின் வழக்கும் அடங்கும்.
கடந்த 1995ஆம் ஆண்டு, டொரண்டோ பகுதியில் பழைய சிற்றூந்து விற்பனையகக் கட்டடம் ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், நிலத்தடியில் பெண் ஒருவரின் என்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
மருத்துவப் பரிசோதனைகளில், குறித்த பெண் சுத்தியல் போன்ற கனமான ஆயுதத்தால் தலையில் ஆறு முறை தாக்கப்பட்டு உயிரிழந்ததுடன், பின்னர் திட்டமிட்டு புதைக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த என்புக்கூடு பல ஆண்டுகளாக மண்ணில் புதைந்திருந்ததால், அதிலிருந்து மரபணு மாதிரிகளைப் பெறுவதில் பாக்டீரியா பாதிப்பு காரணமாக சிரமம் ஏற்பட்டது.
எனினும், அண்மையில் என்புக்கூட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பெறப்பட்ட தூய்மையான மரபணு மாதிரிகள் மற்றும் மரபியல் மரபுவழித் தொழில்நுட்பம் (Investigative Genetic Genealogy - IGG) மூலம் உயிரிழந்தவர் மேரி மெக்லியோட் மாஃபாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1905ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் அபெர்டீன்ஷைர் பகுதியில் பிறந்த மேரி, 1913ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
வரலாற்று ஆவணங்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தச் சம்பவம் 1936ஆம் ஆண்டு அளவில் அவரது கணவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
அவரது கணவர் டிரேக் லோயிட் கம்மிங்ஸ் என்ற போலிப் பெயரில் அமெரிக்கா மற்றும் வான்கூவர் பகுதிகளில் தலைமறைவாக வாழ்ந்ததாகவும், மொத்தம் நான்கு பெண்களைத் திருமணம் செய்த பின்னர் 1985ஆம் ஆண்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த இந்த வழக்கில், மேம்பட்ட தடயவியல் மரபணு பரிசோதனைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் மற்றும் சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக CTV செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது.