அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுடன் நடந்து வரும் போரில், ஈரானைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் அரசாங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹாஜிரானி ((Fatemeh Mohajerani)) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், தென்மேற்கு ஈரானில் உள்ள புஷெர் (Bushehr) விமான நிலையம் அமெரிக்கத் தாக்குதலால் செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டு புதிதாக வாங்கப்பட்ட விமானம் ஒன்றும் அந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். 'நேரடியாகத் தாக்கிய ஏவுகணையால் அந்த விமானம் அழிக்கப்பட்டது; அதன் வால் பகுதியின் ஒரு சிறிய பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது,' என்று அவர் கூறினார்.
ஈரானின் 'தியாகிகள் மற்றும் முன்னாள் படைவீரர் நல அறக்கட்டளை' (Foundation of Martyrs and Veterans Affairs), போரில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை குறைந்தது 1,060 என்று மதிப்பிட்டுள்ளது.
சிலருக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அந்த அமைப்பின் தலைவர் சயீத் ஓஹதி எச்சரித்துள்ளார்.
வாஷிங்டனைச் சேர்ந்த 'மனித உரிமை ஆர்வலர்கள்' (Human Rights Activists) என்ற அமைப்பு, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1,190 என்று அதிகமாகப் பதிவு செய்துள்ளது. இதில் 436 பொதுமக்களும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 435 பேரும் அடங்குவர்.