மோடி அரசாங்கத்தை விமர்சிக்கும் அண்ணாமலை

பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும், 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவருமான அண்ணாமலை, காவிரி மேகதாது அணை விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசை வெளிப்படையாகக் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,கடந்த 2021 ஆம் ஆண்டுஇ அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பகிர்வுச் சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின் ஒப்புதல் இன்றி நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்று தெரிவித்து இருந்ததை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் இலாபத்திற்காக அல்லது கர்நாடகத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குகிறதா என்ற கேள்வியை அண்ணாமலை எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு மத்திய அரசு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசை நேரடியாக விமர்சித்து வந்த அண்ணாமலை, தற்போது கர்நாடகம் - தமிழ்நாடு இடையேயான காவிரி விவகாரத்திலும் மத்திய அரசை விமர்சித்துள்ளமை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bootstrap