ஜப்பானில் கியூஷு தீவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (28) அதிகாலை ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் அந்நாட்டில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 10 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால், கியூஷுவில் உள்ள பல மாகாணங்களுக்கு அதிகாரிகள் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை வெளியிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்கு பின் திரும்பப் பெறப்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 40,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் காணாமல் போனவர்களை மீட்புப் படையினர் தேடிவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சியும் தெரிவித்தார்.