டி20 தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார்.
ஐ.சி.சி கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 29) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து தொடரில் விளையாடவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடரில் விளையாடி அவர் சரியாக சோபிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யவன்ஷி, தனது அதிரடியைத் தொடர்ந்தார். மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் அடித்த சூர்யவன்ஷி, 151 ரன்கள் குவித்திருந்தார்.
முதல் போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்கள் விளாசியிருந்த அவர், இரண்டாவது போட்டியில் 9 பந்துகளில் 20 ரன்களும், மூன்றாவது போட்டியில் 49 பந்துகளில் 81 ரன்களும் எடுத்து சதத்தை நழுவ விட்டிருந்தாலும், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார்.
சிம்பாப்வேவுக்கு எதிரான ஒரே தொடரில் விளையாடியதன் மூலம் கிடுகிடுவென, 230 இடங்கள் முன்னேறி 536 புள்ளிகளுடன் 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவின் மற்றொரு ஆட்டக்காரர் இஷான் கிஷன் 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மா இரண்டு இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சரியாக சோபிக்காத அபிஷேக் சர்மா 2-ஆவது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.