'கடவுள் படங்களையும் மறைத்தோம்...' - போர் சூழலில் வளர்ந்த தமிழ் பிள்ளையின் கதை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் தாக்கம் காரணமாக பெற்றோருடன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பிராமி என்ற யுவதியின் உருக்கமான வாழ்க்கைப் பதிவு இது.

தமிழர் என்ற காரணத்தால் சிறுவயதிலேயே பல்வேறு அச்சங்களையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டதாக பிராமி கூறுகின்றார்.

அவருடைய குழந்தைப் பருவ நினைவுகள், குடும்பப் பிரிவு, நாட்டை விட்டு வெளியேறிய பயணம் மற்றும் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் சவால்களை இதில் பகிர்ந்துள்ளார்.

'என் குழந்தைப் பருவத்தின் முதல் இரண்டு ஆண்டுகளை யாழ்ப்பாணத்தில் கழித்தேன்.

ஆனால் இலங்கையைப் பற்றிய என் சிறுவயது நினைவுகளில் பெரும்பாலானவை கொழும்பின் வெள்ளவத்தையுடனே தொடர்புடையவை.

எங்கள் வீட்டில் இருந்த இந்துக் கடவுள்களின் படங்களை அம்மா மறைத்து வைப்பார். ஏன் அப்படிச் செய்கிறார்? என்று அப்போது எனக்குப் புரியாது.

நெற்றியில் பொட்டு வைக்கும் இயல்பான பழக்கத்தைக்கூட அவர் நிறுத்திக் கொண்டார்.

அம்மாவுக்கு சிங்களம் தெரியாததால், அவருக்கும் சிங்களம் பேசுபவர்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக நான் இருந்தேன்.

பொதுப் போக்குவரத்தில் அம்மா இன வெறி கலந்த வார்த்தைத் தாக்குதல்களுக்கு ஆளாவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் வகையிலான அவமானப்படுத்தல்கள்தான் அப்போதும் நடந்தன.

என் வலது கண் மற்றும் கன்னத்தை மூடி இருந்த இரத்த நாளக் கட்டி (Haemangioma) காரணமாக அம்மா என்னை ஒரு குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

அப்போதுm என்னைப் பரிசோதிப்பதாகக் கூறிய அந்த மருத்துவர்m 'பரிசோதனை' என்ற பெயரில் என் அம்மாவின் மார்பகங்களைத் தவறான முறையில் தொட்டார்.

அது மட்டுமல்லm பின்னர் ஏற்பட்ட மருத்துவ அலட்சியத்தின் காரணமாகm என் வலது கண் மற்றும் கன்னத்தில் இருந்த தோல் நிரந்தரமாக இயல்பற்ற நிலைக்கு மாறியது.

மேலும்m என் வலது கண்ணின் பார்வையையும் வாழ்நாள் முழுவதும்ம் இழந்து விட்டேன்.

பாடசாலையில் மற்ற மாணவர்கள் பேசிக் கொண்டிருந்த திரைப்படங்கள்m இசைm தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பொதுக் கலாசார குறிப்புகள் எனக்குப் புரியாமல் போனது. அதனால் நான் அடிக்கடி சங்கடப்பட்டேன்.

எவ்வளவு முயன்றும் நான் ஒரு சாதாரண மாணவியாகவே இருந்தேன். நான் கடினமாகப் படித்தாலும்m அது என் கருமை நிறத் தமிழ் தோலால் ஏற்பட்ட பாகுபாட்டை ஈடு கட்ட போதுமானதாக இருக்கவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகுm நினைவுகள் தெரிந்த பிறகு முதல் முறையாக என் அப்பாவைப் பார்த்தபோதுm அவரை அடையாளம் காண முடியவில்லை. அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டுm 'இவர் யார்?' என்று கேட்டேன்.

என் பெற்றோரின் திருமண வாழ்க்கை பல ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் வாழ வேண்டிய தொலைதூர உறவாக இருந்தது.

இருப்பினும்m என் உறவினர்களில் பலருக்கு அதை விடக் கடினமான வாழ்க்கை அமைந்தது. பல தசாப்தங்களாக கணவன்–மனைவி பிரிந்தே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

மீண்டும் ஒன்றிணைவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாமல்m சில குடும்பங்கள் முற்றிலுமாக சிதறிப் போயின.

எங்கள் அயலவர்கள் ஒரு முறை எங்களிடம்m 'மீண்டும் தமிழர் எதிர்ப்பு கலவரங்கள் ஏற்பட்டால்m உங்களை நாங்கள் பாதுகாக்க மாட்டோம்' என்று தெரிவித்தனர்.

என் அயல் வீட்டுச் சிறுவன் — அவன்தான் எனது நெருங்கிய விளையாட்டு நண்பன். நாங்கள் வாடகைக்கு இருந்த சிறிய இணை வீட்டின் (Annex) உரிமையாளரின் மகனும் அவன்தான்.

அவன் எனது நகைச்சுவைகளுக்கு சிரிப்பான். ஆனால் அதே நேரத்தில், எங்கள் வீட்டு வாசலில் வந்து 'கொட்டி' (சிங்களத்தில் 'புலி' என்று பொருள்) என்று கத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒருநாள், நாங்கள் அவனது வீட்டின் வரந்தாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவன் கீழே விழுந்து தலையில் சிறிய காயம் ஏற்பட்டது.

அப்போது, நான்கு வயது குழந்தையாக இருந்த எனது தமிழர் என்ற அடையாளமே, ஐந்து அல்லது ஆறு வயதுடைய அந்தச் சிறுவனுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகக் கருதப்பட்டதாக நான் உணர்ந்தேன்.

அதன் பின்னர், நாங்கள் மீண்டும் ஒன்றாக விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அவனை சந்திக்கும்போது, அவனது கண்களில் என்னைப் பற்றிய வெறுப்பு அதிகரித்துக் கொண்டே சென்றதை நான் கவனித்தேன்.

எங்கள் வீட்டின் உரிமையாளரிடம் வேலை செய்த பதின்ம வயது தமிழ் வேலைக்காரச் சிறுமி அடிக்கடி அடி, உதைக்கு உள்ளானாள். ஆனால் எனக்கு அப்படியான தண்டனைகள் கிடைக்கவில்லை.

அப்போது, 'தமிழராக இருப்பதை விட இன்னும் மோசமான ஏதோ ஒன்று இருக்கிறதா?' என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன்.

இலங்கையை விட்டு வெளியேறிய பயணம்

இங்கிலாந்தில் அகதி அடைக்கலம் பெற வேண்டும் என்பதே எங்கள் குடும்பத்தின் விருப்பமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அதற்கான செலவை ஏற்க முடியாத நிலை இருந்தது.

அதிர்ஷ்டவசமாக, எங்களிடம் இருந்த சில வளங்களும் தொடர்புகளும் காரணமாக, திறன் அடிப்படையிலான குடியேற்றத்தின் (Skilled Migration) மூலம் நாட்டை விட்டு வெளியேற உதவும் ஒரு ஆவணத்தைப் பெற முடிந்தது.

என் அம்மா இந்திய அமைதிப்படை (IPKF) காலம் உட்பட பல சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தான அனுபவங்களை எதிர்கொண்டிருந்தார். அத்தோடு, சிறிய மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டிய பொருளாதார நெருக்கடியும் இருந்தது.

இந்த காரணங்களால், நாங்கள் இலங்கையை விட்டு வெளியேறிய பிறகு 18 ஆண்டுகள் மீண்டும் இலங்கையைப் பார்க்க முடியவில்லை.

புலம்பெயர்ந்த நாட்டில் உருவான புதிய பூசை அறை

இலங்கையில் இருந்தபோது, வீட்டுச் சுவரில் வைக்கப்பட்ட கடவுள் படங்களே எங்களுடைய வழிபாட்டு இடமாக இருந்தன. ஆனால் புலம்பெயர்ந்த வாழ்க்கையில், எங்களிடம் அப்படியான வசதிகள் இருக்கவில்லை.

வீடு வீடாக விளம்பரத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் தெருவோரத்தில் கை விடப்பட்டிருந்த ஒரு பழைய தொலைக்காட்சிப் பெட்டியை கண்டெடுத்தோம்.

அதை வீட்டுக்கு கொண்டு வந்து, அதன் உள்ளே இருந்த பாகங்களை அகற்றி, அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியையே ஒரு சிறிய பூசை அறையாக மாற்றிக் கொண்டோம்.

இலங்கையை விட்டு வெளியேறிய பின்னரும் வாழ்க்கை எளிதாக அமையவில்லை.

எனது பெற்றோரின் கடுமையான மன நலப் பிரச்சினைகளை கவனித்துக் கொள்வதும், என் பெற்றோரின் பதற்றமான திருமண வாழ்க்கையை சமாளிப்பதும், தலைமுறைகளைத் தாண்டி வந்த மன உளைச்சல்களுடன் வாழ்வதும் அடுத்த பல தசாப்தங்களுக்கு என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன.

ஆனால், நான் அனுபவித்தவற்றை வெளிப்படுத்துவதற்குத் தேவையான மொழியும், கலாசாரப் புரிதலும், எனது அனுபவங்களை விளக்குவதற்கான சமூக ஆதாரமும் அப்போது என்னிடம் இருக்கவில்லை.

இலங்கையில் நான் வாழ்ந்த காலத்தின் சிறு பகுதிகளைப் பற்றி நான் மிகவும் அரிதாகவே பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்குக் காரணம், தமிழர் அல்லாத சிலர், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை மற்றும் அதிகாரமளித்தல் குறித்து நான் ஏன் அக்கறை கொள்கிறேன்? என்பதை நியாயப்படுத்துவதற்கு, இன்னும் அதிகமான கொடூரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் கதைகளை என்னிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள் என்ற பயம் எனக்குள் உள்ளது.

எனது கதை அவர்களுக்கு 'போதுமான அளவு துயரமானதாக' இல்லாமல் இருக்கலாம் என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.

ஒரு சமூகத்தின் மீது நிகழ்ந்த அநீதிகளைப் பற்றி பேசுவதற்கு, தனிப்பட்ட முறையில் நான் அனுபவித்த மிகக் கொடுமையான சம்பவங்களை மட்டுமே ஆதாரமாக காட்ட வேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது.

ஆனால், பல நேரங்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மீது அப்படியான ஒரு எதிர்பார்ப்பு வைக்கப்படுகிறது.

அதாவது, நாங்கள் எங்கள் உரிமைகள், நீதி, விடுதலை அல்லது சமத்துவம் குறித்து பேசும்போது, எங்களுடைய வலியை நிரூபிப்பதற்காக மீண்டும் மீண்டும் துயரமான அனுபவங்களை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இதனை நான் 'துயரத்தை ஒரு காட்சியாக மாற்றும் நிலை' என்று குறிப்பிடுகிறேன்.

ஆதிக்கம் பெற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது வெள்ளையர்கள் அகதிகளின் நிலை, மனித உரிமைகள் மற்றும் நீதியைப் பற்றி பேசும்போது, அவர்கள் இயல்பாகவே மனித நேயத்தின் அடிப்படையில் அக்கறை கொண்டவர்கள் என்று பார்க்கப்படுகிறார்கள்.

ஆனால் எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அதே விஷயங்களைப் பற்றி பேசும்போது, 'இது உங்களுக்கு நெருக்கமான விஷயம் என்பதால் மட்டுமே நீங்கள் பேசுகிறீர்கள்' என்ற பார்வை உருவாக்கப்படுகிறது.

எங்களுடைய வலி உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக, இன்னும் அதிகமான துயரக் கதைகளை நாம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.

ஆனால் ஒரு சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க, ஒவ்வொரு முறையும் நமது காயங்களையும் வேதனைகளையும் மீண்டும் திறந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு மனிதன் அனுபவித்த துன்பத்தின் அளவு மட்டுமே, அவர் நீதி மற்றும் சமத்துவத்துக்காக பேசுவதற்கான தகுதியை தீர்மானிக்கக் கூடாது.

எங்கள் அடையாளம், எங்கள் வரலாறு, எங்கள் சமூகத்தின் அனுபவங்கள் மற்றும் மனித நேயத்தின் மீதான நம்பிக்கை ஆகியவையே எங்களை பேச வைக்கின்றன.

எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் அதிகாரமளிப்புக்காகவும் குரல் கொடுக்க, எங்கள் வாழ்க்கையை ஒரு துயரக் கதையாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கக் கூடாது.'

Bootstrap