முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணிபுரிந்த போது, மர்மமான முறையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதுடைய தமிழ் சிறுமியான ஆர். ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில் பல தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முக்கிய வாக்குமூலங்கள் மற்றும் விசாரணைகளின் விபரங்கள்
1. பெற்றோரின் வாக்குமூலம்
தமது மகள் வறுமை காரணமாகவே இடைத்தரகர் ஒருவர் மூலமாக கொழும்பிலுள்ள ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டதாகப் பெற்றோர் குறிப்பிட்டனர்.மகளின் மரணத்தில் கடுமையான சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவர்கள், இதற்குக் காரணமானவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தினர்.
2. பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வாக்குமூலம்
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சிறுவர், மகளிர் பணியக அதிகாரிகள் சிறுமி ஹிஷாலினி கல்வி கற்ற அவிசாவெள்ளை, புவக்பிட்டிய பகுதியிலுள்ள கிரிவந்தல தமிழ் வித்தியாலயத்திற்குச் சென்றனர்.அங்குள்ள பாடசாலை அதிபர், உப அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்களிடம் சிறுமியின் நடத்தைகள் மற்றும் பின்னணிகள் குறித்து விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
3. மருத்துவ மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள்,பாலியல் துஷ்பிரயோகம்:
சிறுமி உயிரிழப்பதற்கு முன்னர் நீண்டகாலமாகத் தொடர்ச்சியான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிறுமியின் உடலில் சுமார் 72 வீதமான பகுதி தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தமையே மரணத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய, உடற்கூறாய்வுகளை மீண்டும் மேற்கொள்வதற்காகச் சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மறுபரிசோதனை செய்யப்பட்டது.
4. வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அமர்த்திய இடைத்தரகர் ஆகியோரிடம் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டன. விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார்.
மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
'கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி அந்த வீட்டின் கராஜ் பகுதியினூடாக நுழைந்தேன். அங்கே படிகளில் சிறுமி ஒருவர் இருத்தப்பட்டிருந்தார். அவர் மீது படுக்கை விரிப்பு ஒன்று போர்த்தப்பட்டிருந்தது. அத்துடன், சிறுமியின் உடலில் ஆடைகள் இருக்கவில்லை.
அந்த நேரத்தில் எரியும் ஒரு வாசனை உணரப்பட்டது. அது, எரியும் போது தோலில் இருந்து வெளிவரும் வாசனையாகும். எனினும் அது எவ்வகையான வாசனை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது.
கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் அடையாளம் காண முடிந்தது. சிறுமி என்னிடம் தண்ணீர் கேட்டார். அதற்கு மேல் வேறு எதையும் அவர் என்னிடம் கூறவில்லை.
உடனடியாக சிறுமியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமி இறந்த பின்னரே பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்.
சுவசரிய அவசர சேவை தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப அழைப்புக்குப் பதிலளிக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை உடனடியாகக் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அடிப்படை முதலுதவிகள் குறித்து அறிவுறுத்தினோம்.
இருந்த போதிலும், நாங்கள் அங்கே சென்றடையும் போது குறித்த தரப்பினரால் அவை பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் பொலிஸார் எங்களுக்கு எந்தவிதமான முறையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை' என அவர் குறிப்பிட்டுள்ளார்.