உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் வடகொரியா தயாரித்த பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஷ்யா மீண்டும் வடகொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் 280-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைனின் 10 பிராந்தியங்களில் இந்தத் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உக்ரைன் ராணுவத்தின் முதற்கட்ட ரேடார் ஆய்வுகளின்படி, இவை வடகொரியாவின் KN-23அல்லது KN-24 ரக குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் சொந்த 'இஸ்கந்தர்' ஏவுகணைகளை விட அதிக வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை மற்றும் நீண்ட தூரம் பாயக்கூடியவை.
ஆனால், இவை துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் குறைவானவை என்பதால், குடியிருப்புப் பகுதிகளில் விழும்போது அதிகப்படியான பொதுமக்களின் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகின்றன.
ரஷ்யா மற்றும் வடகொரியாவின் இந்த ராணுவக் கூட்டணி, உக்ரைன் குழந்தைகளைக் கொல்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள ஒரு 'பயங்கரவாத நடவடிக்கை' என்று ஜெலென்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார். ரஷ்யாவின் இத்தகைய பாலிஸ்டிக் ஏவுகணைகளை அமெரிக்காவின் 'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அமைப்புகளால் மட்டுமே தடுக்க முடியும் என்பதால், மேற்கத்திய நாடுகள் உடனடியாக கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே வடகொரியா தனது 14,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ள நிலையில், மேலும் 30,000 வடகொரிய வீரர்களை உக்ரைன் எல்லைப் போரில் ஈடுபடுத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் உக்ரைன் உளவுத்துறை எச்சரித்துள்ளது.