கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய 'எம்எஸ்சி எல்சா 3' கப்பலிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை உள்ள கடற்கரைப் பகுதிக்கு இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதுடன், பருவமழை காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.
இந்தப் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகளுக்காக சுமார் 1,800 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனமே ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல்சார் சூழலியல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்காக அறவிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று கூடியது என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
லைபீரியக் கொடியின் கீழ் இயங்கிய 'MSC Elsa 3' என்ற இந்த கொள்கலன் கப்பல், இந்தியாவின் கேரளக் கடற்கரைக்கு அப்பால் சுமார் 38 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நீர் கசிவுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கடந்த மே 25 ஆம் திகதி மூழ்கியது.
விபத்து இடம்பெற்றபோது கப்பலில் 643 கொள்கலன்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.