லெபனான் நாட்டின் தொழிலதிபருக்கு மூன்றாவது முறையாக லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரைச் சேர்ந்தவர் அண்டோனி லபாகி (வயது 53). இவர் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்..
சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற துபாய் டியூட்டி ப்ரீ என்ற மில்லினியம் மில்லியன் பெயரின் குலுக்கலில் லெபனானைச் சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் அண்டோனி லபாகி மீண்டும் மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9.5 கோடி) பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
53 வயதான அண்டோனி லபாகிக்கு துபாய் டியூட்டி ப்ரீ மூலம் கிடைக்கும் 3-வது பெரிய அதிர்ஷ்டம் இதுவாகும்.
கடந்த 2004-ல் பிஎம்டபிள்யூ காரையும், 2018-ல் தனது முதல் 1 மில்லியன் டாலர் லாட்டரியையும் அவர் வென்றிருந்தார்.
கடந்த ஜூலை 17-ந்தேதி அவர் ஆன்லைனில் வாங்கிய 3360 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.
இதன் மூலம் துபாய் டியூட்டி ப்ரீ வரலாற்றில் இரண்டு முறை 1 மில்லியன் டாலர் வென்ற 12-வது நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
பெய்ரூட்டில் வசிக்கும் லபாகி தனது சகோதரியுடன் காபி குடித்துக் கொண்டிருந்த போது துபாயில் இருந்து இந்த இன்ப அதிர்ச்சி அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து அவர் கலீஜ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
'2018-ல் நான் வென்ற முதல் 1 மில்லியன் டாலர் தொகையை லெபனானுக்கு மாற்றினேன். ஆனால் அங்கு நிலவிய சூழ்நிலையால் அதை என்னால் முதலீடு செய்ய முடியாமல் முழுமையாக இழந்துவிட்டேன்.
அதனால் இந்த முறை உஷாராக இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த முழுப் பணத்தையும் உலகின் மிகப்பாதுகாப்பான நகரமான துபாயிலேயே முதலீடு செய்யப் போகிறேன்.
துபாயில் ஒரு சொந்த வீடு வாங்கி, எனது கட்டுமானத் தொழிலையும் இங்கேயே விரிவுபடுத்தி, குடும்பத்துடன் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளேன்.'துபாய் நகரம் தனக்கு உலகத்தையே பரிசாகக் கொடுத்துள்ளதாக உணர்ச்சிவசப்பட்ட அவர், இனி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து டிக்கெட் வாங்கப் போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.