முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கனடாவிற்கு மாணவர் விசா மூலம் வந்து கல்லூரியில் படித்து வந்த ரோஷன் ஷா என்ற இந்தியப் பிரஜை, அமெரிக்காவில் முதியவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பிரம்மாண்ட பணமோசடி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக இவருக்கு நீதிபதி 48 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கனடாவில் படித்து வந்த ரோஷன் ஷா, மோசடி மூலம் கிடைத்த பணத்தையும் தங்கத்தையும் சேகரிப்பதற்காக சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.
இந்தியாவில் உள்ள இவரது நண்பர்கள் அமெரிக்காவில் உள்ள முதியவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் அடையாள அட்டைகள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பயமுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பிற்காகத் தங்களது பணம் அல்லது தங்கத்தைப் போலி கூட்டாட்சி முகவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைத்துள்ளனர்.
இந்த போலி முகவராகவே ரோஷன் ஷா நேரில் சென்று பணத்தைச் சேகரித்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 முதியவர்களிடம் இருந்து மொத்தம் 3.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கத்தை ரோஷன் ஷா திரட்டியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
விஸ்கான்சினில் உள்ள நியூ பெர்லின் பகுதியில் மீண்டும் ஒரு மோசடிப் பணத்தைச் சேகரிக்க முயன்றபோது, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.