2 மாதங்களாக பனியில் உறைந்த நபர் உயிருடன் வந்த அதிசயம்

ஒரு மனிதர் 2 மாதமாக பனிக்கு அடியில் புதைந்து கிடந்துள்ளார். ஒரு கிராம் சாப்பாடு கூட இல்லாத நிலையில் அவர் 2 மாதங்கள் கழித்து உயிருடன் திரும்பி மருத்துவர்களை திகைக்க வைத்துள்ளார்.

டிசம்பர் 2011-ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 44 வயதான பீட்டர் ஸ்கைல்பர்க் என்ற நபர், நாட்டின் கடுங்குளிர் நிறைந்த வடபகுதி வழியாகக் காரில் பயணித்தபோது திடீரென மாயமானார். உறைபனிக்குக் கீழே வெப்பநிலை சரிந்த நிலையில்,இ வாரக் கணக்கில் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், பிப்ரவரி 2012-ஆம் ஆண்டு, பனிச்சறுக்கு வாகனத்தில் சென்ற சிலர், பனிக்குவியலுக்கு நடுவே ஒரு காரின் கூரை மட்டும் லேசாக வெளியே தெரிவதைக் கண்டனர்.

சுமார் ஒரு மீட்டர் பனியைத் தோண்டிப் பார்த்தபோது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே, மாயமான அந்த நபர் உணவின்றி, மிகவும் பலவீனமான நிலையில், உயிருடன் அமர்ந்திருந்தார். பனி படர்ந்த காரின் உள்ளே கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சிக்கியிருந்தும் அவர் உயிருடன் இருந்தது மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

டிசம்பர் மாத இறுதியில் பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, பீட்டர் ஸ்கைல்பர்க் ஓட்டிச் சென்ற வாகனம் கிராமப்புறச் சாலையில் நகர முடியாமல் முடங்கியது. பிபிசி  செய்தியின்படி, அடுத்தடுத்த வாரங்களில் பெய்த கடும் பனிப்புயலால், அந்த கார் மெதுவாக சுமார் ஒரு மீட்டர் பனிக்கு அடியில் புதைந்தது. காரின் ஒரு சிறிய பகுதி மட்டுமே வெளியில் தெரிந்தது.

பிப்ரவரி 17, 2012 அன்று, அப்பகுதியைக் கடந்து சென்ற பனிச்சறுக்கு வீரர்கள், பனிக்கு அடியில் இருந்த அந்த வித்தியாசமான வடிவத்தைக் கவனித்து தோண்டத் தொடங்கினர். அப்போது, காரின் உள்ளே டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த நபர் நகரவோ பேசவோ முடியாத நிலையில், ஆனால் சுயநினைவோடு இருந்தார்.

உடனடியாக அவசரக்கால மீட்புக் குழுவினர் அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர நீர்ச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் 'ஹைபோதெர்மியா' - உடல் வெப்பநிலை மிகக் குறைதல்) ஆகிய பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் உணவே இன்றி அவர் உயிர் பிழைத்ததாக மருத்துவ வல்லுநர்கள் கணித்தனர். அவர் காரில் இருந்த பனியை உருக்கிக் குடித்ததன் மூலம் உடலில் ஆபத்தான நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்துள்ளார். அதே நேரத்தில், ஆற்றலுக்காக அவரது உடலின் கொழுப்புச் சேமிப்பை உடல் பயன்படுத்திக் கொண்டது.

கடும் குளிரில் நீண்ட நேரம் இருந்ததால், அவரது உடல் தீவிர ஆற்றல் சேமிப்பு நிலைக்குச் சென்றுள்ளது. இதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் பெருமளவில் குறைந்து, குறைந்த அளவிலான கலோரிகளிலேயே உடல் இயங்கியுள்ளது. காரை மூடியிருந்த அடர்ந்த பனிப்படலம், வெளிப்புறத்தின் கடும் குளிரில் இருந்து காரின் உட்புறத்தைப் பாதுகாக்கும் ஒரு 'இயற்கைப் போர்வை' போலச் செயல்பட்டுள்ளது.

உணவின்றி மனிதர்கள் சில வாரங்கள் உயிர் வாழ முடியும் என்றாலும், இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் இரண்டு மாதங்கள் உயிர் பிழைப்பது மிகவும் அரிதானது. ஒருவரின் உயிர் பிழைப்பு என்பது நீர்ச்சத்து, உடலின் கொழுப்பு அளவு, உடல் இயக்கம், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆழமான பனி அடுக்குகள், ஒப்பீட்டளவில் வெப்பமான காற்றைப் பிடித்து வைத்து, வெப்ப இழப்பைக் குறைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாகும்.

Bootstrap