வியக்கவைக்கும் கடலடி அறிவியல் உண்மை

மூளையும் ரத்தமும் இல்லாத ஜெல்லிமீன்கள் மற்றும் கடல் சாமந்திகள் கூட தினமும் 8 மணிநேரம் தூங்குகின்றன என்ற ஆச்சரியமான உண்மையை பார்-இலான் பல்கலைக்கழக ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

தூக்கம் என்பது மனிதர்களுக்கோ அல்லது பெரிய விலங்குகளுக்கோ மட்டுமே உரிய ஒன்று என நீங்க நினைத்தால், அது தவறு. ரத்தமும் இல்ல, மூளையும் கூட இல்ல, ஆனாலும் ஜெல்லிமீன்கள் மற்றும் கடல் சாமந்திகள் கூட தினமும் நிம்மதியாகத் தூங்குகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சமீபத்தில் பார்-இலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய வியப்பூட்டும் ஆய்வு, தூக்கத்தைப் பற்றிய நமது பார்வையையே தலைகீழாக மாற்றியுள்ளது.

நாம் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் நமது நரம்பணுக்கள் கடினமாக உழைக்கின்றன. அப்படி உழைக்கும்போது, அவற்றில் உள்ள டி.என்.ஏ நுணுக்கமான அளவில் பாதிப்படைகிறது. இந்தச் சிதைவுகளைச் சரிசெய்ய இயற்கை வைத்துள்ள ஒரே வழிதான் தூக்கம். சிக்கலான மூளைகள் உருவாவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, தூக்கம் என்ற பழக்கம் விலங்குலகில் தோன்றிவிட்டது. ஜெல்லிமீன்களும் நம்மைப் போலவே ஒரு நாளைக்குச் சுமார் 8 மணிநேரம் தூங்குகின்றன. தூங்க விடாவிட்டால் என்ன ஆகும்? இந்த உயிரினங்களைத் தூங்க விடாமல் தடுத்தால், அவற்றின் டி.என்.ஏ பாதிப்பு அதிகரிக்கிறது. பிறகு அவை மீண்டும் தூங்கும்போது, இழந்தத் தூக்கத்தை ஈடுகட்ட வழக்கத்தை விட அதிக நேரம் குறட்டை விட்டு தூங்குகின்றன.

மற்ற உயிரணுக்களைப் போல நரம்பணுக்கள் அவ்வளவு எளிதாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியாது. ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தூக்கத்தின்போது மட்டுமே நரம்பணுக்களால் சரிசெய்ய முடிகிறது. தூக்கம் என்பது உடலுக்கான ஓய்வு மட்டுமல்ல, அது நரம்பணுக்களுக்கான மெயின்டனன்ஸ் ஒர்க்காகும்.

ஜெல்லிமீன்கள் போன்ற எளிய உயிரினங்களுக்கே தூக்கம் இவ்வளவு அவசியம் என்றால், கோடிக்கணக்கான நரம்பணுக்களைக் கொண்ட மனித மூளைக்குத் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியான தூக்கமின்மை, மூளையில் நரம்பணுச் சிதைவை ஏற்படுத்தி அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற தீவிர நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும்.

நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனைத் தாண்டி, மூளையின் நீண்ட கால ஆயுளுக்குத் தூக்கம் ஒரு கவசமாகச் செயல்படுகிறது. அடுத்த முறை நீங்க தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டு வேலை செய்யவோ அல்லது இரவில் மொபைல் பார்க்கவோ நினைத்தால், இந்த ஜெல்லிமீன்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

மூளையே இல்லாத ஒரு உயிரினம் தன் நரம்புகளைக் காப்பாற்ற 8 மணி நேரம் ஒதுக்கும்போது, நாம் ஏன் ஒதுக்கக் கூடாது? நல்ல தூக்கம் என்பது சோம்பேறித்தனம் அல்ல; அது உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு அற்புதமான அறிவியல் செயல்முறை.

Bootstrap