செவ்வாயில் பழங்கால ஏரியைக் கண்டுபிடித்த நாசாவின் ரோவர்

செவ்வாய் கிரகம் வறண்ட பாலைவனம் மட்டுமல்லஇ அது ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த ஈரமான உலகமாக இருந்திருக்கலாம் என்பதை நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் கண்டறிந்துள்ளது.

செவ்வாய் கிரகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவப்பு நிறப் பாறைகளும், வறண்ட பாலைவனமும் தான். ஆனால், செவ்வாய் வெறும் வறண்ட கிரகம் மட்டுமல்ல, அது ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த ஈரமான உலகமாக இருந்திருக்கலாம் என்ற உண்மையைச் சமீபத்திய கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற முடியுமா என்ற கேள்விக்கு விடைதேடும் மனித குலத்தின் நீண்டகால பயணத்தில்இ இப்போது மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நாசாவின் 'பெர்சீவரன்ஸ் ரோவர்', செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அலைகள் வந்து மோதிய பழங்காலக் கடற்கரை ஒன்றை அடையாளம் கண்டுள்ளது. செவ்வாயின் 'ஜெஸீரோ கிரேட்டர்' பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த ரோவர், அங்குள்ள பாறைகளை ஆராய்ந்தது. அப்போது, அந்தப் பாறைகள் நீரலைகளால் தொடர்ந்து அரிக்கப்பட்டு உருண்டையாக மாறியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதன்மூலம், சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பிரமாண்ட ஏரியின் கரையாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய இந்த ஆய்வின்படி, செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் பூமியைப் போலவே இதமான காலநிலையையும், ஓடும் நீரையும் கொண்டிருந்திருக்கலாம். அங்கு கண்டறியப்பட்ட கார்பனேட் தாதுக்கள், பண்டைய காலத்து சுற்றுச்சூழல் தகவல்களைத் தங்களுக்குள் 'சீல்' செய்து பத்திரமாகப் பாதுகாக்கும் திறன் கொண்டவை. பூமியில் இது போன்ற நீர்நிலைகளுக்கு அடியில் நுண்ணுயிரிகள் வாழ்வது வழக்கம். எனவே, செவ்வாய் கிரகத்திலும் ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க மிக அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

தற்போது பெர்சீவரன்ஸ் ரோவர் சேகரித்து வரும் பாறை மாதிரிகள் எதிர்காலத்தில் பூமிக்குக் கொண்டு வரப்படவுள்ளன. அவை பூமிக்கு வந்து சேரும்போது, செவ்வாய் கிரகத்தைப் பற்றிய இன்னும் பல பிரம்மாண்ட ரகசியங்களும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெஸீரோ கிரேட்டர் என்பது செவ்வாய் கிரகத்தின் சமவெளிப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 45 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு மிகப்பெரிய விண்கல் பள்ளமாகும் . செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த பள்ளத்தில் நதி முகத்துவாரம் போன்ற அமைப்புகள் இருப்பது முன்பே கண்டறியப்பட்டது. சுமார் 3.5 முதல் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாயில் நீர் திரவ நிலையில் ஓடிய காலத்தில், இந்த பள்ளம் நீரால் நிரப்பப்பட்டு ஒரு பிரமாண்ட ஏரியாக செயல்பட்டுள்ளது.ரோவரின் அதிநவீன கேமராக்கள் மற்றும் கருவிகள் மூலம் பாறைகளின் வடிவம் ஆராயப்பட்டது.

வழக்கமாக செவ்வாயில் உள்ள பாறைகள் கூர்மையாகவும் கோணல் மாணலாகவும் இருக்கும். ஆனால், கடற்கரை பகுதியில் கண்டறியப்பட்ட பாறைகள் அலைகளின் தொடர்ச்சியான உரசலால் தேய்ந்து உருண்டையாக மாறியுள்ளன. இது பூமியில் உள்ள ஆற்றுப் படுகைகள் மற்றும் கடற்கரை பாறைகளை ஒத்துள்ளது.

கார்பனேட் தாதுக்கள் ஏரியின் விளிம்புப் பகுதிகளில் கார்பனேட் படிவுகள் அதிகளவில் கண்டறியப்பட்டு உள்ளன. கார்பனேட்டுகள் நீரிலும் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடிலும் ஏற்படும் வினைகளால் உருவாகுபவை. இவை பண்டைய கால படிமங்களை சிதையாமல் பாதுகாக்கும் சிறந்த ஊடகமாக பூமியில் செயல்படுகின்றன. அடுக்கமைவுகள் நீர் அலைகளால் கொண்டுவரப்பட்ட களிமண் மற்றும் மணல் படிவுகள் காலப்போக்கில் பாறைகளாக உறைந்திருப்பதை ரோவர் படம் பிடித்துள்ளது.

பண்டைய நுண்ணுயிரிகள் வாழ சாத்தியக்கூறு பூமியின் வரலாற்றை உற்று நோக்கினால், முதல் உயிரினங்கள் ஆழமற்ற நீர்நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில்தான் தோன்றின. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை இணைந்து திட்டமிட்டுள்ள மார்ஸ் சாம்பிள் ரிட்டன் விண்கலம் மூலம் இந்த மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்படும். இறுதி ஆய்வில் பூமியில் உள்ள அதிநவீன ஆய்வகங்களில் அந்த பாறைகள் பரிசோதிக்கப்படும்போது, செவ்வாயில் உயிர்கள் இருந்தனவா? என்ற கேள்விக்கு இறுதியான, வரலாற்றுப்பூர்வமான விடை கிடைக்கும்.

Bootstrap