கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் (Ebola virus) மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வைரஸால் இதுவரை 3,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தகவல் மற்றும் ஊடக அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் வரலாற்றிலேயே உலகின் 2-வது மிகப்பெரிய எபோலா பேரழிவாக இது பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் 2018 முதல் 2020 வரை கொங்கோவில் ஏற்பட்ட 10-வது எபோலா பரவலின் போது 3,470 பேர் பாதிக்கப்பட்டதே பதிவாக இருந்த நிலையில், தற்போதைய பரவல் அதைக் கடந்து தீவிரமடைந்துள்ளது.

வைரஸ் தொற்றால் இதுவரை 1,556 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி இறப்பு விகிதம் 44.1வீதமாக உள்ளது.

807 நோயாளிகள் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தல் மையங்களிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 626 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது பரவி வரும் எபோலா நோய், புண்டிக்புகியோ என்ற (Bundibugyo strain) என்ற அரிய வகை வைரஸ் பிரிவைச் சேர்ந்தது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கென அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேக தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இதுவரை கண்டறியப்படவில்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கிழக்கு கொங்கோவில் பல ஆயுதமேந்திய குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதால், சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சர்வதேச அளவில் நிதியுதவிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் பொருட்கள் மற்றும் மனிதவள பற்றாக்குறை நிலவுகிறது.

மக்களிடையே விழிப்புணர்வு குறைபாடு மற்றும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், பலர் நவீன மருத்துவத்திற்குப் பதிலாக நாட்டுப்புற மருத்துவ முறைகளை நாடிச் செல்கின்றனர்.

இதனால் தொற்றின் சங்கிலி தொடர்ந்து நீடிக்கிறது.

இந்தநிலையில், இதுவரை கண்டிராத மிக வேகமாகப் பரவக்கூடிய எபோலா தொற்றாக இது உருவெடுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்தின் செயல் தலைவர் காரல் ஸ்கா தெரிவித்துள்ளார்.

எனவே சர்வதேச சமூகம் உடனடியாக இதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த 1.4 பில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் என ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மதிப்பிட்டுள்ளது.

Bootstrap