உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் இராட்சத ஓர்க்கிட் பூக்கள் பேராதனை தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.
கிராமட்டோபில்லம் ஸ்பீசியோசம் (Grammatophyllum speciosum) என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரம், உலகின் மிகப்பெரிய அளவிலான ஓர்க்கிட் தாவரமாகப் பதிவாகியுள்ளதாகப் பேராதனை தாவரவியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகப் பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் ஓர்க்கிட் பிரிவுத் தலைவி இரோஷணி அந்த்ராதி தெரிவிக்கையில்,
'இந்த இராட்சத ஓர்க்கிட் தாவரத்தின் பூக்களைப் பேராதனைத் தாவரவியல் பூங்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகே பார்க்க முடிகிறது. இந்த மலர்கள் பூத்துள்ள தாவரம் 2022 ஆம் ஆண்டில் நடவு செய்யப்பட்டது.
அதில் முதல்முறையாக தற்போது பூக்கள் பூத்துள்ளன. இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு அளவில் இந்த மலர் வகை காணப்பட்டது. அதன் பிறகு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னரே இப்போது காண முடிகிறது.
மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமான இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே அதிகமாகப் பரவியுள்ளது. இதன் ஒரு பெரிய தாவரமானது சுமார் ஒரு தொன் எடையைக் கொண்டிருக்கும். இதில் இரண்டு முதல் மூன்று மீற்றர் உயரமுள்ள பூங்கொத்துகள் உருவாகின்றன.
இந்த மலர் வகை மிகவும் அரியது என்பதால், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்க்கொத்தைக் கண்டுகளிக்க வருமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.
பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் தற்போது பூத்துள்ள இந்த இராட்சத ஓர்க்கிட் மலர்க்கொத்தைக் கண்டுகளிக்க அனைவரையும் வரவேற்பதாகத் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்களைப் பார்ப்பதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.