டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் ஒருவரை சந்தித்த இளைஞருக்கு முதல் நாளில் 20,500 ரூபாய் செலவான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் அறிமுகமான பெண்ணை சந்திக்க சென்ற அந்த இளைஞர், குறிப்பிட்ட ஒரு பப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அங்கு மது அருந்தாத போதிலும், அந்த பெண் ஷாம்பெயின் மற்றும் ஹூக்கா என விலையுயர்ந்த பொருட்களை தாராளமாக ஆர்டர் செய்துள்ளார்.
இறுதியில் பில் தொகை 20,500 ரூபாயை தாண்டியபோது, பில் வரும் நேரத்தில் அந்த பெண் கழிவறைக்கு சென்றுவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். பணத்தை இழந்ததை விட, தனது வருகையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பில்லை கட்ட வைக்கும் இதுபோன்ற முறைகளை கையாண்டதுதான் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவைப் பார்த்த பல சமூக வலைதள பயனர்கள், இது டெல்லி-என்சிஆர் பகுதியில் பரவலாக அரங்கேறிவரும் ஒரு பிரபலமான 'டேட்டிங் ஆப் மோசடி' என்று எச்சரித்துள்ளனர். தெரியாத நபர்களை சந்திக்கும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு பலியாக கூடாது என்றும் பலரும் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இணைய நண்பர்களை சந்திக்கும் முன் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.