தெருவில் தவிக்கும் விலங்குகளின் துயரம் கண்டு உருகும் நெஞ்சங்களும், அவற்றைக் காக்கத் துடிக்கும் கரங்களும் தான் இந்த உலகை இன்னும் மனிதநேயத்துடன் இயங்க வைக்கின்றன.
ஆனால், அதே ஜீவன்களைக் காப்பாற்றச் சென்ற ஒரு இளம் பெண்ணின் உயிர், அதே மிருகத்தனமான தாக்குதலுக்குப் பலியாகிப்போன சோகம் கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான அமண்டா நோபிஸ் விலங்குகள் மீது அளவில்லா அன்பு கொண்ட ஒரு தீரமிக்க ஆர்வலர்.
'K9 அட்வகேசி மணிட்டோபா' அமைப்பில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்த அமண்டா, மணிட்டோபா மாகாணத்தில் உள்ள சாண்டி பே ஓஜிப்வே பழங்குடியினப் பகுதிக்குத் தன் வாழ்வின் இறுதிப் பயணத்தை மேற்கொள்வார் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
அன்று, தாய் நாயொன்றையும் அதன் புதிதாக பிறந்த குட்டிகளையும் மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வருவதற்காக அமண்டா தனியாக அங்கு சென்றிருந்தார்.
ஆனால், அந்த வீட்டில் உரிமையாளர் இல்லாத நேரத்தில், அங்கிருந்த இரு ஆண் நாய்கள் எல்லை மீறிய பாதுகாப்பு உணர்ச்சியாலும் ஆக்ரோஷத்தாலும் அமண்டாவை கொடூரமாகத் தாக்கியுள்ளன.
நாங்கள் பல வருடங்களாக இந்த சமூகங்களுக்குத் தனியாகச் சென்று விலங்குகளை மீட்டு வருகிறோம். அமண்டாவும் அப்படித்தான் எதையும் யோசிக்காமல் ஓடோடிச் சென்றாள். ஆனால், நடக்கக்கூடாத மிக மோசமான ஒரு கொடூரம் நடந்து முடிந்துவிட்டது என அந்த அமைப்பின் இயக்குநர் செலீசா கோர்க் குறிப்பிடுகின்றார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையும் அமண்டாவின் உடல் முழுவதும் நாய்கள் கடித்த கொடூரமான காயங்கள் இருந்ததை உறுதிசெய்தது.
பின்னர் அதிகாரிகளின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்திய இரு நாய்களும் அழிக்கப்பட்ட நிலையில், அந்தத் தாய் நாயும் குட்டிகளும் மீட்கப்பட்டன.
அமண்டாவின் இந்த இறப்பு, வெறும் விபத்து அல்ல, அது பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு பெரும் சமூகப் பிரச்சினையின் கொடூரமான முகம் என தெரிவிக்கப்படுகின்றது.
மணிட்டோபா மாகாணத்தில் உள்ள 63 பழங்குடியினக் கிராமங்களில் மட்டும் மாதத்திற்குச் சராசரியாக 1,000 நாய் கடி சம்பவங்கள் பதிவாகின்றன.
ஆனால், அதிகாரப்பூர்வமாகப் பதிவாகாத சம்பவங்கள் இதைவிடப் பல மடங்கு அதிகம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.