ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக இந்த அணுமின் நிலையம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த மின் நிலையம் நாட்டின் மின்சார தேவையின் அரைபங்கிற்கும் மேல் வழங்கி வருகிறது. ஆனால், டானியூப் ஆற்றின் நீர்மட்டம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் சென்றதால், ரியாக்டர்களை குளிர்விக்க தேவையான நீர் கிடைக்கவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை உற்பத்தி 965 மெகாவாடாகக் குறைந்தது. பின்னர் இரவில் 240 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. சாதாரணமாக 2,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையம் இப்போது இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டானியூப் ஆற்றின் நீர்மட்டம் -134 சென்டிமீற்றராக குறைந்துள்ளது. இது 2018-இல் பதிவான -98 செ.மீ. சாதனை அளவை விட மிகக் குறைவு. மேலும், நீர்மட்டம் -144 செ.மீ. வரை குறையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வறட்சி ஹங்கேரியில் 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள் தங்களின் நீர் பயன்பாட்டை குறைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், அண்டை நாடான ஸ்லோவாக்கியா, ஹங்கேரிக்கு உதவ தாயாக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெப்ப அலைகள் தாக்கியுள்ளன. விஞ்ஞானிகள் இதற்கு மனிதனால் உண்டான காலநிலை மாற்றமே காரணம் எனக் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் ஹங்கேரியின் மின்சார உற்பத்தி மட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்து, சுற்றுலா, வேளாண்மை மற்றும் தொழில்துறை துறைகளையும் பாதித்துள்ளது.
வறட்சி மற்றும் வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பா முழுவதும் ஆற்றல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.