பேராதனைப் பல்கலை கல்வி நடவடிக்கைகள் தற்காலிக இடைநிறுத்தம்

நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேவேளை, பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லுமாறும், சீரற்ற வானிலையால் செல்ல முடியாதவர்கள் விடுதி நிர்வாகத்தின் அனுமதியுடன் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபாயகரமான தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக விடுதிகளுக்கு மாற்றப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என வலியுறுத்தியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், நிலைமை சீராகும் வரை அனைத்து மாணவர்களும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Bootstrap