தற்போது பசிபிக் பெருங்கடலில் ஜப்பானின் தெற்குப் பகுதியில் உருவாகி வரும் சூறாவளி காரணமாக, எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு மீண்டும் மழை நிலைமை தீவிரமடையக்கூடுமெனவும், தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை நிலைமை நாளை (04) நண்பகலுக்குப் பின்னர் படிப்படியாகக் குறையுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதன் காரணமாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிகளவிலான மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.