செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மருத்துவம், கல்வி, தொழில்துறை, வங்கிச் சேவை, விவசாயம் மற்றும் போக்குவரத்து என மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஏ.ஐ. தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. இது மனிதர்களின் பணிச்சுமையைக் குறைத்துச் செயல்திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பமாகப் பார்க்கப்பட்டாலும், இதன் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, ஏ.ஐ. பயன்பாடு அதிகரிப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக விளங்குபவை தரவு மையங்கள் (Data Centers) ஆகும். ஆயிரக்கணக்கான உயர் திறன் கொண்ட கணினிகள் மற்றும் கிராபிக்ஸ் செயலிகள் (GPU) தொடர்ந்து இயங்குவதால், இந்த மையங்களில் அதிகளவில் வெப்பம் உருவாகின்றது.
இந்த வெப்பத்தைக் கட்டுப்படுத்த நீர் சார்ந்த குளிர்விப்பு அமைப்புகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
பெரிய அளவிலான ஏ.ஐ. மாதிரிகளை உருவாக்கவும், பயிற்றுவிக்கவும், தொடர்ந்து இயக்கவும் கணிசமான அளவு தண்ணீர் தேவைப்படுகின்றது.
உலகம் முழுவதும் புதிய தரவு மையங்கள் வேகமாக அமைக்கப்பட்டு வரும் நிலையில், அவை உள்ளூர் நீர் வளங்களின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக வறட்சி பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இது குடிநீர் தட்டுப்பாட்டை மேலும் தீவிரமாக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் எச்சரிக்கின்றனர்.
ஒருபுறம் ஏ.ஐ. தொழில்நுட்பம் அதிக தண்ணீரைப் பயன்படுத்தினாலும், மறுபுறம் அது நீர் மேலாண்மையில் மிக முக்கிய பங்காற்றி வருவதுடன், விவசாயத்தில் தேவைக்கேற்ப மட்டும் நீர்ப்பாசனம் வழங்கி நீரைக் சேமிக்க உதவுகின்றது.
இதே போல குடிநீர் விநியோகக் குழாய்களில் ஏற்படும் நீர் கசிவுகளைத் துல்லியமாகக் கண்டறிவடதுடன், நீர்த்தேக்கங்களைத் திறம்பட நிர்வகிக்கவும், வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை முன்கூட்டியே கணிக்கவும் பயன்படுகின்றது.
ஏ.ஐ. வளர்ச்சியால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன
இதற்கென குளிர்விப்புத் தேவைக்காகச் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்துதல்,
காற்று அடிப்படையிலான குளிர்விப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், குறைந்த தண்ணீர் பயன்பாட்டில் இயங்கும் திறன்மிக்க தரவு மையங்களை உருவாக்குதல் என்பனவாகும்.
இறுதியாக ஏ.ஐ. மனிதகுலத்தின் எதிர்கால வளர்ச்சியில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறைக்கு ஏ.ஐ. மட்டுமே ஒரே காரணம் அல்ல என்றபோதிலும், அதன் வளர்ச்சியால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
தொழில்நுட்ப முன்னேற்றமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமநிலையுடன் முன்னெடுக்கப்படும் போதுதான் நிலையான எதிர்கால வளர்ச்சியை நம்மால் சாத்தியப்படுத்த முடியும்.