கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம்
கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏழே நிமிடங்களில் கொள்ளைப்போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Coldcard வன்பொருள் வாலட்களுடன் (hardware wallets) தொடர்புடைய பாதுகாப்பு மீறல் ஒன்று கிரிப்டோகரன்சி சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சுமார் 1,367.05 பிட்காயின்கள் (BTC) திருடப்பட்டிருக்கலாம் என்று பிளாக்செயின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள், வாலட்டின் 'சீட் ஃப்ரரேஸ்' (seed phrase) உருவாக்கச் செயல்முறையில் இருந்த ஒரு குறைபாட்டைப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பலர் தங்களின் பிட்காயின் சேமிப்புகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒருவர் கனடிய தொழில்முனைவோரான ஜொனாதன் குட்மேன்.
இவருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான 18.25245043 பிட்காயின்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ 15 கோடி என்றே தெரிய வருகிறது.
குட்மேன் தெரிவிக்கையில், தனக்குச் சொந்தமான பிட்காயின் அனைத்தும் கோல்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்ததால் அவை பாதுகாக்கப்படுவதாக நம்பியதாக கூறியுள்ளார்.
கோல்ட் ஸ்டோரேஜ் என்பது, பிரைவேட் கீகள் உருவாக்கப்பட்டு, ஒரு ஹார்டுவேர் வாலட்டில் ஆஃப்லைனில் வைக்கப்படும் ஒரு முறையாகும். ஆனால், பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள் கோல்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்ததையும் திருடியுள்ளனர்.
மேலும், வெறும் ஏழே நிமிடங்களில் தமக்குச் சொந்தமான பிட்காயின்கள் பறிபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட Coldcard சாதனங்களில் 'சீட் ஃபிரேஸ்களை' (seed phrases) உருவாக்கும் குறியீட்டில் உள்ள ஒரு சிக்கலை பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள் பயன்படுத்திக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொள்ளைபோன பிட்காயின்கள் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காவிட்டாலும், காவல்துறை மற்றும் ஒன்ராறியோ பாதுகாப்பு ஆணையத்திடம் புகாரளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குட்மேன் கூறியுள்ளார்.