நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவு குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் (International Association of Judges) தனது தீவிரக் கவலையை வெளியிட்டுள்ளது.
1953 இல் ஆஸ்திரியாவின் சல்ஸ்பர்க் நகரில் தொடங்கப்பட்ட இச்சங்கம், இத்தாலியின் ரோமைத் தலைமையமாகக் கொண்டது. இது உலகெங்கிலும் உள்ள நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகும்.
தன்னிச்சையான, தற்காலிக மற்றும் அவசரமான தீர்மானங்களின் அடிப்படையில் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் ஏற்கனவே இதுகுறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
இத்தகைய சட்டங்கள் தர்க்கரீதியான, கொள்கைசார்ந்த மற்றும் வலுவான அரசியலமைப்புச் சட்டத் திருத்த நடைமுறையின் மூலமே கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் நீதித்துறையின் சுதந்திரம் சீர்குலைந்துவிடும் என்பதால், இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.