சீரற்ற வானிலை - 500 குடும்பங்கள் இடப்பெயர்வு

கடும் மழை காரணமாக மகாவலி நதியின் நீர்மட்டம் உயர்ந்து கம்பளைப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் சுமார் 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

உடப்பத்த மற்றும் தொலுவ பிரதேச செயலகங்கள், இடப்பெயர்ந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் மற்றும் கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த ஆகியோர் தலைமையில் நேற்று (3) நடைபெற்ற அவசரகால அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

கம்பளையில் பாபில, போத்தலப்பிட்டிய, கங்கவத்தை வீதி, பல்லவெல, நாவலப்பிட்டி வீதி, லியோனி, குடமக்கே, நாரன்வித்த மற்றும் இன்குருவத்தை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இப்பகுதிகளில் இருந்து இடப்பெயர்ந்துள்ள சுமார் 500 குடும்பங்கள் கம்பளை பள்ளிவாசல், ககத்தபிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் போத்தலப்பிட்டிய கங்காதிலக்க விகாரை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பளைப் பிரதேசத்தில் நிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசரகாலத் திட்டங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வெள்ளம் தொடர்பான அவசரநிலைகளின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆறு படகுகள் களமிறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Bootstrap