எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது த.வெ.க. மகளிரணியினர், தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
பலத்த பாதுகாப்புடன்பொலிஸ் வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்படும் நிலையில், அவரது வீட்டுக்கு வெளியே கூடியிருந்த தி.மு.கவினர் பொலிஸ் வாகனத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தி.மு.க. தொண்டர்கள் மீது தடியடி நடத்திய பொலிஸார் கிழக்கு கடற்கரை வீதி வழியாக உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் அழைத்துச் செல்கின்றனர்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.