கடந்த நான்கு நாட்களில் வட்டவளைப் பகுதியில் 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அறிவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நேற்று (03) ஒரே நாளில் மட்டும் 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அது அன்றைய தினத்தில் நாட்டில் பதிவான அதிகபட்ச மழைவீழ்ச்சியாகும்.
மேலும், அம்பகமுவை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த மூன்று நாட்களில் 150 முதல் 500 மில்லிமீற்றர் வரையிலான அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் குறுகிய காலத்திற்குள் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகுவது தற்போது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டதாக கலாநிதி வசந்த சேனாதீர சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தற்போதைய நிலைமையை முன்னர் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி காலத்துடன் ஒப்பிட முடியாது என்றும், அக்காலப்பகுதியில் இதைவிட அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலையகப் பகுதிகளில் மண்சரிவு மற்றும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதால், அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.