ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு "ஒப்பந்தம் (Deal) அல்லது முழுமையான சரணடைவு (Total Surrender)" என்ற இரண்டு வழிகளே உள்ளதாக கடுமையாக எச்சரித்துள்ளார்.

தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், ஈரான் பேச்சுவார்த்தைக்காக மறைமுகமாக முயற்சி செய்தபோதும், பொதுவெளியில் அதை மறுப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

"ஈரான் ஒப்புக்கொண்டாலும் இல்லையென்றாலும், பல தசாப்தங்களாக அவர்கள் உருவாக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீது ஈரான் கட்டுப்பாடு செலுத்துவதாக கூறுவதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

"ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே அமெரிக்க கடற்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்கா விரும்பினால் மட்டுமே ஈரானுக்குள் எதுவும் செல்லும்; ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைவு ஏற்படும் வரை அதுவே தொடரும்," என்று அவர் கூறினார்.

இதற்கு முன், ஈரான் மீது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தேன் என்றும், ஆனால் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வேண்டுகோளையும், ஈரான் தரப்பிலிருந்து வந்த அணுகுமுறையையும் தொடர்ந்து அந்தத் திட்டத்தை ஒத்திவைத்ததாக ட்ரம்ப் தெரிவித்திருந்துள்ளார்.

மேலும், திங்கட்கிழமை முதல் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சக பேச்சாளர் எஸ்மாயில் பகாயி, அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என்றும், ஓமனுடன் பாதுகாப்பான கடல் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

Bootstrap