இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 'சண்டீபுரா'வைரஸ் தொற்றினால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சுகாதார அதிதீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கப்பட்ட 184 பேரில், இதுவரை 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுவதாகவும் குஜராத் சுகாதார அமைச்சர் பிரபுல் பஞ்சேரியா தெரிவித்துள்ளார்.
காந்திநகர், சபர்காந்தா-ஹிமத்நகர், படான், ராஜ்கோட் மற்றும் பவநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் 7 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேவேளை, 6 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகக் சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மண்சுவர்களில் உள்ள வெடிப்புகளை உடனே அடைக்குமாறும், கால்நடை வளர்ப்புப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலுள்ள 'சண்டீபுரா' என்ற கிராமத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் இந்த வைரஸுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
இது முக்கியமாக மணல் ஈக்கள் , கொசுக்கள் மற்றும் உண்ணிகள் மூலம் பரவுகின்றது.
குறிப்பாகச் சேற்று வீடுகள் மற்றும் மண்சுவர் வெடிப்புகளில் வாழும் மணல் ஈக்களே இதன் முதன்மை கடத்திகளாகச் செயல்படுகின்றன.
9 மாதம் முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே இந்த வைரஸ் அதிகமாகத் தாக்குகின்றது.
தொடக்கத்தில் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும். பின்னர் தீவிர மூளை வீக்கத்தை ஏற்படுத்தி வலிப்பு, மயக்க நிலை மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும்.
மழைக் காலத்தில் இதன் பரவல் அதிகரிப்பதாகத் தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றபோதிலும், இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.