குழந்தைப் பிறப்பு மற்றும் குடும்பத் திட்டமிடல் தொடர்பான தனிப்பட்ட அனுபவங்களின் பின்னணியில், ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையான Vasectomy முறையைத் தெரிவுசெய்யும் ஆண்களின் எண்ணிக்கை சில நாடுகளில் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை தரவுகளின்படி, 2024-2025ஆம் ஆண்டில் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் 26,385 Vasectomy அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது 2023-2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 16 சதவீத அதிகரிப்பாகும்.
அதிக எண்ணிக்கையில் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டவர்கள் 35 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்கள் எனவும், அந்த வயதுப் பிரிவில் மட்டும் சுமார் 8,400 அறுவைச் சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 30 வயதுக்குக் குறைவான ஆண்களிடையேயும் Vasectomy சிகிச்சையைத் தெரிவுசெய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறித்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-2025ஆம் ஆண்டில் அந்த வயதுப் பிரிவில் சுமார் 950 சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரித்தானியாவின் முன்னாள் பொதுமருத்துவரும், கருத்தடை சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் பணிப்பாளருமான மருத்துவர் சாரா சொல்கெல்ட், வாசெக்டமி பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான சிகிச்சை முறை என தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் ஆண்கள் முழுமையாக சிந்தித்து, தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாசெக்டமி தவிர, ஆணுறைகள் மற்றும் பிற குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளும் ஆண்களுக்கான மாற்று வழிகளாக இருப்பதாக சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன.